மின் தீப தேரில் பவனி வந்த முத்தாலம்மன்; அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2024 12:03
பரமக்குடி; பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழாவில் மின் தீப தேரில் அம்மன் கோயிலை வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இக்கோயிலில் கொடி ஏற்றத்துடன் பங்குனி விழா தொடங்கி நடக்கிறது. தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் அருள்பாலித்தார். 9 ம் நாள் விழாவில் நேற்று காலை தொடங்கி இரவு வரை ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், வேல் குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு அம்மன் சர்வ அலங்காரத்துடன் மின் அலங்கார தேரில் அமர்ந்தார். பின்னர் நான்கு மாட வீதிகளில் ஆடி அசைந்து வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் தேரினை சக்தி கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்து வந்தனர். அப்போது வான வேடிக்கைகளுடன், மேள தாளத்துடன் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். இரவு 9:30 மணிக்கு அம்மன் தேரிலிருந்து மீண்டும் கோயிலில் சேர்க்கை ஆகினார். இன்று கொடி இறக்கமும், நாளை காலை 5:00 மணி தொடங்கி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடங்களை சுமந்து நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர்.