பதிவு செய்த நாள்
26
மார்
2024
01:03
அனுப்பர்பாளையம்; அவிநாசி தாலுகா, பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் தேர் திருவிழா கடந்த 15 ம் தேதி கிராம சாந்தி, கொடியேற்றத்துடன் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. கோவில் குண்டம் பூ இறங்குதல் நிகழ்ச்சி இன்று 26ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு நடைப்பெற்றது. முன்னதாக நேற்று இரவு 1:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள பரிவார மூர்த்திகளின் கன்னிமார் - கருப்பராயன், முனீஸ்வரன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்மை அழைத்தலை தொடர்ந்து, காப்பு கட்டு பூசாரிகள் கை குண்டம் வாரி இறைத்து, குண்டம் இறங்குதலை தொடங்கி வைத்தனர். பக்தர்கள் மஞ்சள் உடை உடுத்தி ஜெய் சக்தி, பரா சக்தி என்ற கோஷங்கள் முழங்க பரவசத்துடன் வரிசையாக குண்டம் இறங்கினர். பக்தர்கள் வரிசையாக குண்டம் இறங்க தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. அதிகாலை 4:30 மணிக்கு தொடங்கிய குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி காலை 10:00 மணி வரை நடைபெற்றது. 11:00 மணிக்கு குண்டம் மூடுதல், 3:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று. கோவில் தேர் திருவிழாவில், அவிநாசி, திருப்பூர், குன்னத்தூர், நம்பியூர், கோபி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவையொட்டி, கோவில் நிர்வாகம் சார்பில், கோவில் வளாகத்தில் 50 இடங்களில் சிசி டி.வி கேமரா, 30 இடங்களில் மொபைல் டாய்லெட், கோவில் உள் வளாகத்தில் 10 இடங்களில் ராட்சத மின் விசிறி, ஆகியவை அமைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் வாகனங்களை நிறுத்த திருப்பூர் ரோட்டில் பெருமாநல்லூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி எதிரிலும், அவிநாசி ரோட்டில் சவுமியா மருத்துவமனை எதிலும், நம்பியூர் ரோட்டில் லட்சுமி வாட்டர் சர்வீஸ் எதிரிலும், குன்னத்தூர் ரோட்டில் எம்.எல்.ஆர் திருமண மண்டபம் எதிலும், ஈரோடு ரோட்டில் ராபா ஹோண்டா ஷோரூம் அருகிலும், இடம் ஏற்பாடு செய்து இருந்தனர். கூடுதல் எஸ்.பி இருவர் தலைமையில், மூன்று டி.எஸ்.பி., 11 இன்ஸ்பெக்டர், 28 சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், ஊர் காவல் படையினர் என 650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். சிவபக்தர் வந்து செல்ல திருப்பூர், நம்பியூர், செங்கப்பள்ளி, அவிநாசி, ஆகிய ஊர்களில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.