பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பால்குட விழா; அம்மனுக்கு குடம் குடமாக அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2024 05:03
பரமக்குடி; பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி பால்குட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் சுமந்து சக்தி கோஷம் முழங்க நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இக்கோயிலில் மார்ச் 1 பூச்சொரிதல் விழா நடந்த நிலையில், மார்ச் 17 கொடியேற்றத்துடன் பங்குனி விழா துவங்கியது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். மார்ச் 25 அக்னி சட்டி ஊர்வலம், இரவு மின் தீப அலங்கார தேரில் அம்மன் வலம் வந்தார். மறுநாள் அதிகாலை கள்ளர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் அம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து இன்று காலை 4:00 மணி தொடங்கி வைகை ஆற்று பகுதிகளில் பல்வேறு அமைப்பினர் சார்பில் பால்குடங்களை கட்டும் நிகழ்வு நடந்தது. அங்கிருந்து நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சக்தி கோஷம் முழங்க கோலாகலமாக சென்றனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் வேல் குத்தி நேர்த்திக்கடன்களை செலுத்தினார். தொடர்ந்து 5 மணி நேரம் வரை பக்தர்கள் கோயிலை நோக்கி சென்ற வண்ணம் இருந்தனர். பின்னர் காலை 10:00 மணி தொடங்கி அனைத்து வகையான அபிஷேகங்கள் நடந்தன. மேலும் பக்தர்கள் சுமந்து வந்த நூற்றுக்கணக்கான லிட்டர் பால் மூலவர் மற்றும் உற்சவருக்கு குடம் குடமாக அபிஷேகம் செய்யப்பட்டது. மகா தீபாராதனைக்கு பின் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.