பதிவு செய்த நாள்
13
ஏப்
2024
10:04
சென்னை :தி.நகரில் உள்ள டி.டி.டி., எனும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பெருமாள் கோவிலில், திருபாய் அம்பானியின் மனைவியும், மகளும் தரிசனம் செய்தனர்.
மறைந்த திருபாய் அம்பானியின் மனைவி கோகிலாபென் அம்பானி மற்றும் அவரது மகள் நினா கோத்தாரி ஆகியோர், தமிழகம் வந்துள்ளனர். இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில், நேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களை, டி.டி.டி., தமிழக, புதுச்சேரி ஆலோசனைக் குழு தலைவர் சேகர் வரவேற்று மரியாதை செய்தார். தரிசனம் முடித்த இருவரும், கோவிலை சுற்றி வந்து பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்த எப்படி உதவலாம் என விசாரித்தனர். மேலும், புதிய கோவில் அமைக்க தேவையான உதவிகளை செய்வதாக கூறினர்.
டபிள்யு.எஸ்., இண்டஸ்ட்ரீஸ்; ரூ.1 கோடி நன்கொடைதி.நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில், அதே இடத்தில் விரிவாக்கம் செய்து புது கோவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு, டபிள்யு.எஸ்., இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் தலைவர் நாகராஜன் செய்யதுரை, 1 கோடி ரூபாய்க்கான காசோலையை நன்கொடையாக வழங்கினார். இதை, டி.டி.டி.,தமிழக புதுச்சேரி, ஆலோசனைக் குழுத் தலைவர் சேகர் பெற்றுக்கொண்டார். தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில், பெருமாள் கோவில் அமைக்க கூடுதல் நிலம் வாங்குவதற்கு, தேவஸ்தானங்கள் திரட்டும் நிதியில், இந்த பங்களிப்பு இடம்பெறுகிறது.