பதிவு செய்த நாள்
06
நவ
2012
10:11
காஞ்சிபுரம்: விஜயநகரப் பேரரசு காலத்தில் கட்டப்பட்ட ஐயங்கார்குளம் சஞ்சீவிராயர் சுவாமி கோவில், மதில் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மதில் சுவர் சரிவதற்கு முன், அதை பழுது பார்க்க, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பழமையான கோவில்காஞ்சிபுரத்தில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஐயங்கார்குளம். இங்கு அழகிய சஞ்சீவிராயர் சுவாமி கோவில் உள்ளது. இதன் நான்கு புறங்களிலும் நெடிதுயர்ந்த மதில்சுவர், ராஜகோபுரம், 50 தூண்கள் கொண்ட மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை மற்றும் பிரகாரங்களை உள்ளது.இக்கோவில், காஞ்சியை விஜயநகர மன்னர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்டுள்ளது. கோவில் மூலவராக ஆஞ்சநேயர் உள்ளார். கோவில் பின்புறம் தாதசமுத்திரம் என அழைக்கப்படும் பிரமாண்ட குளம் உள்ளது. இக்கோவில், இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.மதில் சுவர் சேதம்தினமும் காலை, மாலை என, இரு காலப் பூஜைகள் நடந்து வருகிறது. கோவில் முகப்பு வாயில் இடதுபுற மதில் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பக்கதர்கள் அவ்வழியே செல்ல அச்சப்படுகின்றனர்.எனவே, பழுதடைந்துள்ள சஞ்சீவிராயர் கோவில் மதில் சுவரை சரி செய்ய வேண்டும், என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து ஐயங்கார்குளத்தை சேர்ந்த பக்தர்கள் கூறுகையில், "சஞ்சீவிராயர் கோவிலை அறநிலையத் துறை அதிகாரிகள் முறையாக பராமரிப்பதில்லை. கோவில் கோபுரத்தில், செடிகள் முளைத்து விரிசலை ஏற்படுத்தி வருகின்றன. மதில் சுவர்களும், விரிசல் ஏற்பட்டு அபாய நிலையில் உள்ளது. வரலாற்றில் இடம் பெற்றுள்ள இக்கோவிலை பராமரிக்க, இந்த சமய அறநிலையத் துறையினர் போர்க்கால அடிப்படையில், நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.