விநாயகர் கோவில் கட்ட நிலம் வழங்கிய முஸ்லிம்கள்; கும்பாபிஷேகத்திற்கு சீர் வரிசை தந்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மே 2024 07:05
காங்கேயம்; காங்கேயம் அருகே விநாயகர் கோவில் கட்ட நிலம் வழங்கிய முஸ்லிம்கள், கும்பாபிஷேக விழாவுக்கு, சீர்வரிசை வழங்கினர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த படியூர், ஓட்டப்பாளையம் ரோஸ் கார்டன் பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்துக்கள் மட்டுமின்றி முஸ்லிம்களும் உள்ளனர். இப்பகுதியில் விநாயகர் கோவில் கட்ட தீர்மானிக்கப்பட்டது. போதிய இடம் இல்லாத நிலையில், அதே பகுதியில் ஆர்.எம்.ஜே.ரோஸ் கார்டன் முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலுக்கு சொந்தமான, மூன்று சென்ட் நிலத்தை, இஸ்லாமியர்கள் கோவிலுக்கு வழங்கினர். இதன் மதிப்பு ஆறு லட்சம் ரூபாய். இதையடுத்து கோவில் கட்டும் பணி நடந்து முடிந்தது. நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக பள்ளிவாசலில் இருந்து ஐந்து தட்டுகளில் சீர்வரிசை பொருட்களை எடுத்து, ஊர்வலமாக வந்து கோவிலுக்கு வழங்கினர். விழாவில் அன்னதானமும் வழங்கினர்.