பதிவு செய்த நாள்
27
மே
2024
10:05
அவிநாசி; அவிநாசி அடுத்த கந்தம்பாளையம் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அனுமந்த பெருமாள் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா, வெகு விமர்சையாக நடைபெற்றது.
அவிநாசி வட்டம், செம்பியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கந்தம்பாளையம் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அனுமந்த பெருமாள் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா,ஸ்ரீ ஸ்ரீ மான் கொங்கு மண்டல ஜீயர் நாராயண இராமானுஜர் முன்னிலையில் நடைபெற்றது. முன்னதாக,கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள அரச மரத்து விநாயகர் கோவிலிலிருந்து 101 பெண்கள் தீர்த்த குடம் எடுத்தும் முளைப்பாரி எடுத்தும் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். நேற்று முன்தினம்,விமான கலசம் மற்றும் மூலவர் விக்கிரகங்களுக்கு திருமஞ்சனம், ஸ்ரீ விக்னேஸ்வரர் பூஜை, மஹா சங்கல்பம், வாஸ்து சாந்தி, அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்டவைகள் முதல் கால யாக பூஜையில் நடைபெற்றது. நேற்று, சுப்ரபாதம் திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆகியவற்றுடன் கலச புறப்பாடு நடைபெற்று ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீனிவாச மூர்த்தி ஐயங்கார் தலைமையில், கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கந்தம்பாளையம், இடையர்பாளையம், உக்கரம் பகுதி மக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.