பதிவு செய்த நாள்
28
மே
2024
01:05
பழநி; முருகப் பெருமானின் பெருமையை, உலகில் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பழநியில் இந்த ஆண்டு அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஆக., 24, 25ல் பழநியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கவும், ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கவும் தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. muthamizhmuruganmaanadu2024.com கட்டுரைகளை பதிவு செய்யலாம்.
மாநாடு இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது;
உலக நாடுகளில் திருமுருக வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. இந்தியா, இலங்கை, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மொரீசியஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, கனடா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் தனித்துவம் பெற்ற வழிபாடாகச் சிறந்து விளங்குகிறது. ஆகவே, உலக முருக பக்தர்களையும் சிந்தனையாளர்களையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை இம்மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
முருகப்பெருமானை நக்கீரர், குமரகுருபரர், அருணகிரிநாதர் தொடங்கி வாரியார் வரை போற்றிய அருளாளர் பலர் உண்டு. முதன்முதலில் முருகனின் மேன்மை கண்ட பழந்தமிழர், இளமையும் அழகும் உடைய செம்பொருளாகக் கொண்டு வழிபட்ட மாண்பை ஆய்வு நோக்கில் நிறுவ முருக பக்தர்களை உலகளவில் ஒருங்கிணைத்து அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு – 2024 பழனியில் 24.08.2024 மற்றும் 25.8.2024 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
மாநாட்டின் குறிக்கோள்கள்
முருக வழிபாட்டின் உள்ளுறை நெறிகளை உலகெங்கிலும் பரப்புதல்.
முருகனை அடைவிக்கும் தத்துவக் கோட்பாடுகளை யாவரும் எளிமையாக அறிந்து அருளேற்றம் பெற உதவுதல்.
மேன்மை பொலியும் முருகனடியார்களை உலகளாவிய அளவில் ஒருங்கிணைத்தல்.
முருக வழிபாட்டு நெறியை புராணங்கள், இலக்கியங்கள், திருமுறைகள், திருப்புகழ், சைவ சித்தாந்த சாத்திரங்கள் ஆகியவற்றில் இருந்து ஆழ்ந்தெடுத்து அதன் முத்துக்களை உலகறிய பரப்புதல் ஆகும்.
மாநாட்டை சிறப்பாக நடத்த, 20 பேர் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி குழு அமைக்கும்படி, அறநிலையத்துறை கமிஷனர் அரசுக்கு செயற்குறிப்பு அனுப்பினார். அதை பரிசீலனை செய்த அரசு, துறை அமைச்சர் தலைமையில், 20 பேர் அடங்கிய ஒருங்கிணைப்பு குழுவை நியமித்துள்ளது. துறை செயலர் துணை தலைவராகவும், கமிஷனர் உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.