கடையநல்லூர்: கோயில் அன்னதான திட்டத்தினை சிறப்பு செய்யும் வகையில் நன்கொடையாளர்களுக்கு வைர அட்டை வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 500க்கும் மேற்பட்ட கோயில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இத்திட்டத்திற்கான கோயில்களில் உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. மதியம் அறுசுவை உணவுடன் அன்னதான திட்டம் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது ஸ்ரீரங்கம் உள்ளிட்ட சில முக்கிய கோயில்களில் நித்திய அன்னதான திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் கோயிலில் இத்திட்டத்தை துவக்கி வைத்தார். மேலும் பல கோயில்களை சேர்த்திட அறநிலையத்துறை ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோயில் அன்னதான திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் வைர அட்டை வழங்கும் திட்டத்தினை அறநிலையத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. தொன்மையும், வரலாற்று சிறப்புமிக்க தமிழக கோயில்களில் "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற முதுமொழிக்கிணங்க தமிழக முதல்வரின் நலத்திட்டங்களில் ஒன்றான அன்னதான திட்டத்திற்கு நன்கொடை வழங்குவோரை ஊக்குவிக்கும் வகையில் குறைந்தபட்சம் 7 லட்ச ரூபாய் நன்கொடை வழங்குவோருக்கு முதல்வர் ஜெயலலிதாவால் வைரஅட்டை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.வைர அட்டையின் சிறப்பம்சங்களாக இந்த அட்டை பெறுவோர் தமது குடும்பத்தார் 7 நபர்களுடன் 20 ஆண்டுகளுக்கு சிறப்பு தரிசன முன்னுரிமை வசதி வழங்கப்படும் எனவும், வைர அட்டையின் மூலம் கோயில்களின் சிறப்பு தரிசனத்திற்கும், அர்ச்சனைக்கும், ஒருநாளில் இரண்டு கால பூஜைகளில் கலந்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் கோயில் சிறப்பு தரிசன முன்னுரிமை என்பது அந்தந்த கோயில்களின் ஆண்டு திருவிழாக்களுக்கு பொருந்தாது எனவும், இந்த அடையாள அட்டை பரம்பரை உரிமை கோரத்தக்கதல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வைர அட்டை வழங்கும் திட்டம் குறித்து பக்தர்கள் மிக அதிகளவில் வரக்கூடிய கோயில்களில் பிளக்ஸ் போர்டுகள் வைத்து இத்திட்டம் குறித்த தகவல்களை அறிய செய்ய வேண்டும் எனவும் அனைத்து கோயில் நிர்வாகத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.