பதிவு செய்த நாள்
08
நவ
2012
11:11
தென்காசி: தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர் கோயிலில் கடந்த மாதம் 30ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் திருக்கல்யாண திருவிழா துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்பாள் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.விழாவின் 9ம் நாளான நேற்று காலையில் அலங்கரிக்கப்பட்ட தேருக்கு அம்பாள் எழுந்தருளினார். காலை 9.30 மணியளவில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தேரின் ஒரு பகுதி வடத்தினை ஆண்களும், மறு பகுதி வடத்தினை பெண்களும் இழுத்தனர். மேள தாளம், பஞ்ச வாத்தியங்கள் முழங்க தேர் நான்கு ரதவீதிகளையும் சுற்றி 10.30 மணிக்கு நிலை வந்து சேர்ந்தது. பக்தி கோஷங்கள் முழங்க சிறப்பு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம், நீர் மோர் வழங்கப்பட்டது. அம்பாள் திருத்தேரிலிருந்து கோயிலுக்கு எழுந்தருளினார். தேரோட்டத்தில் அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளர் எம்.எல்.ஏ., சின்னச்சாமி, கோயில் நிர்வாக அதிகாரி கணபதி முருகன், அ.தி.மு.க.,நகர செயலாளர் முத்துக்குமார், நகராட்சி துணைத் தலைவர் சுடலை, நகர ஜெ.,பேரவை செயலாளர் முருகன்ராஜ், கூட்டுறவு மாரிமுத்து, சுப்புராஜ், கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணம்மாள், சங்கரசுப்பிரமணியன், சாமி, முன்னாள் கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணன், அகமதுஷா, அண்ணா தொழிற்சங்கம் செந்தூர்பாண்டி, பரமசிவன், கந்தசாமி பாண்டியன், இளவரசு, குத்தாலிங்கம், பா.ஜ., திருநாவுக்கரசு, பிச்சாண்டி செட்டியார் சைக்கிள் டீலர் பழனி, சதீஷ், டாக்டர் மோகன், ராஜாமணி டெக்ஸ்டைல் ராஜாமணி, சண்முகசுந்தரம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர் திருப்பதி தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் செய்திருந்தனர். மாலையில் திருக்குறள் நடராஜனின் ஆன்மிக சொற்பொழிவு, இரவு அம்பாள் பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடந்தது. இன்று (8ம் தேதி) மாலையில் ஐயாத்துரையின் ஆன்மிக சொற்பொழிவு, இரவு ரிஷப வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி வீதி உலா வருதல் நடக்கிறது. விழாவின் இறுதி நாளான நாளை (9ம் தேதி) காலையில் அம்பாள் யானைப்பாலம் தீர்த்தவாரி மண்டபத்திற்கு எழுந்தருளல், மாலையில் தெற்குமாசி வீதியில் காசிவிசுவநாதர் உலகம்மனுக்கு தபசு காட்சி கொடுத்தல், இரவு திருக்கல்யாணம் நடக்கிறது.