பதிவு செய்த நாள்
05
ஜூன்
2024
05:06
நெய்க்காரபட்டி; பழநி, நெய்க்காரபட்டி அருகே வேலூர் மண்டு காளியம்மன், உச்சி காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
பழநி, நெய்க்காரப்பட்டி பேரூராட்சி, கே.வேலூர் மண்டு காளியம்மன் கோயில், உச்சி காளியம்மன் கோயில் திருவிழா மே.21., அன்று சாமி சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் (ஜூன்.4ல்) சண்முக நதியில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி, தீர்த்தம் எடுத்து வந்தனர். நேற்று (ஜூன்.5ல்) அதிகாலை பூக்குழி இறங்குதல் நிகழ்வு நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கினர். அதனை தொடர்ந்து பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், முடியிறக்குதல், பூச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை செய்தனர். நாளை (ஜூன்.7) 1008 குத்து விளக்கு பூஜை நடைபெற உள்ளது. திருவிழாவில் நெய்க்காரப்பட்டி ஆர். வாடிப்பட்டி, அ.கலையம்புத்தூர் பாப்பம்பட்டி, சின்ன கலையம்புத்தூர், உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பக்தர்கள் திரளாக அம்மனை வழிபட்டனர். பழநி தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.