பதிவு செய்த நாள்
09
நவ
2012
10:11
கோவில்களில் வாடகை பாக்கி வைத்திருப்போரின் பெயர்கள் வெளியிட்ட பின், இரண்டு கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. பட்டியல் வெளியிட்டும், பணம் செலுத்தாமல் உள்ளோர் மீது, போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில், இந்து சமய அறநிலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, அனைத்து கோவில் நிலங்களில், வணிக நிறுவனங்கள் அமைத்து, வாடகை பாக்கி வைத்திருப்போர் குறித்து, அதிகாரிகள் கணக்கெடுத்து வருகினறனர். தமிழகம் முழுவதும் உள்ள, 4,000 கோவில்களிலும், சென்னையிலுள்ள, 239 கோவில்களிலும் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. முதல் பத்து இடங்களில், யார் யார் இருக்கின்றனர் என்பதை, பெயர் பட்டியலிட்டு, கோயில்களில் அறிவிப்பு பலகை வைத்திருக்கின்றனர். மேலும்,வாடகை பாக்கி வைத்திருப்போர், நிலுவை தொகையை செலுத்த, கால அவகாசமும் கொடுக்ககப்பட்டுள்ளது. கால அவகாசத்தையும் தாண்டி, நிலுவை வைத்திருப்போர் மீது, குற்ற நடவடிக்கை எடுக்க, போலீசில் புகார் கொடுக்கப்படும். இந்நிலையில், கோயில்களில் வாடகை பாக்கி வைத்திருப்போர் பட்டியல் வெளியிட்ட பின், இரண்டு கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "பெயர் வெளியிட்ட பின், பலரும் இதை மானக்கேடாக நினைத்தனர். தினமும் கோவில்களுக்கு வருகிறவர்கள், காலையும் மாலையும், அப்பெயர் பலகைகளை பார்ப்பதால், தங்கள் வணிகத்திற்கு தடை ஏற்படும் என நினைத்து, பாக்கிகளை செலுத்தி வருகின்றனர். ஒரு சிலர் இவ்வாறு செலுத்தி இருந்தாலும், பலர் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்றனர்.