பதிவு செய்த நாள்
09
நவ
2012
10:11
ராசிபுரம்: ராசிபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடந்த தீமிதி திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர். ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், ஐப்பசி மாத திருத்தேர் விழா, அக்டோபர், 23ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அதையடுத்து, நாள்தோறும் ஸ்வாமி அலங்கரிக்கப்பட்டு பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது. நேற்று அதிகாலை ஒரு மணி முதல் காலை ஆறு மணி வரை, தீ மிதித்தல் நடந்தது. ராசிபுரம் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, பக்தர்கள் அலகு குத்தியும், அக்னிச் சட்டி ஏந்தி வந்து ஊர்வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர், மாலை, 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்வாமி வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.