பதிவு செய்த நாள்
21
ஜூன்
2024
11:06
மாமல்லபுரம்; ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி அபுமிரேகா பகுதியில், முதலாவது ஹிந்து கோவிலாக, ‘பி.ஏ.பி.எஸ்., – பாப்ஸ்’ என்ற போச்சசன்வாசி அஷர் புருஷோத்தம் சுவாமி நாராயண் சன்ஸ்தா கற்கோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு அரசு வழங்கியுள்ள இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இக்கோவிலை, பிரதமர் மோடி, கடந்த பிப்., 14ம் தேதி திறந்து வைத்தார். அமீரகத்தில் வாழும் ஹிந்துக்கள் வழிபடுகின்றனர். இந்தியாவின் மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளைச்சேர்ந்த பூசாரிகள், அங்கு அர்ச்சகர்களாக சேவையாற்றுகின்றனர். அவர்களில், 45 பேர் கொண்ட குழுவினர், தற்போது தென்னிந்திய யாத்திரை வந்துள்ளனர். பெங்களூருவிலிருந்து திருப்பதி சென்ற அவர்கள், நேற்று மாமல்லபுரம் வந்தனர். இங்குள்ள பல்லவர் கால சிற்பங்கள், ஹிந்து மத இதிகாசத்தின் அடிப்படையில் சுவாமியர் சிலைகள் வடிக்கப்பட்டுள்ளதை கண்டு வியந்தனர். திருச்சி, தஞ்சாவூர், கன்னியாகுமரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், யாத்திரை செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.