பதிவு செய்த நாள்
21
ஜூன்
2024
12:06
மதுரை, இந்தியன் ரயில்வேயின்ஐ.ஆர்.சி.டி.சி., சுற்றுலா பிரிவு சார்பில் ‘கேதார் – பத்ரி – கார்த்திக் சுவாமி (முருகன்) கோவில் யாத்திரை’செல்லும் ‘பாரத் கவுரவ் எக்ஸ்பிரஸ்’ சிறப்பு சுற்றுலா ரயில் நேற்று மதுரை கூடல்நகரில் இருந்து ரிஷிகேஷிற்கு புறப்பட்டது.
நேற்று மாலை 6:15 மணிக்கு துவங்கிய இப்பயணம் திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை வழியாக ஜூன் 23 காலை 7:10 மணிக்கு ரிஷிகேஷ் சென்றடைகிறது. 14 பெட்டிகள் கொண்ட இச்சிறப்பு ரயிலில் மொத்தம் 170 பயணிகள் செல்கின்றனர். ரிஷிகேஷ், ருத்ரபிரயாக், குப்தாகாஷி, கேதர்நாத், ஜோஷிமாத், பத்ரிநாத் ஆகிய இடங்கள் இப்பயணத்தில் இடம் பெறுகின்றன. முழுவதும் குளிர்சாதன பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் பயணிகளுக்கு இலவச சைவ உணவு (மூன்று வேளை) வழங்கப்படும்.
இந்தியன் ரயில்வே தென் மண்டல குழு பொது மேலாளர் ராஜலிங்கம் பாசு கூறியதாவது: ஐ.ஆர்.சி.டி.சி., உத்தரகண்ட் மாநில சுற்றுலா வாரியம் இணைந்து ‘பாரத் கவுரவ்’என்ற சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்துள்ளது. மதுரையில் இருந்து 70 பேர் இப்பயணத்தில் பங்கேற்கின்றனர் என்றார்.
உத்தரகண்ட் சுற்றுலா வளர்ச்சி வாரிய சி.இ.ஓ., சச்சின் குர்வே கூறியதாவது: ஏற்கனவே இரண்டு ஆன்மிக சுற்றுலா ரயில்களை அறிமுகப்படுத்தினோம். அதற்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு அளித்ததை தொடர்ந்து இந்த கேதார் – பத்ரி – கார்த்திக் ரயில் செல்கிறது. உத்தரகண்டில் அதிகம் அறிமுகம் இல்லாத இடங்களுக்கு, நாடு முழுவதில் இருந்தும் சுற்றுலா பயணிகளை அழைத்து வருவதே நோக்கம். உத்தரகண்ட் சுற்றுலா துறையின் இந்த முயற்சி இந்திய அளவில் முதன்மையானது. இவ்வாறு கூறினார்.
அச்சமின்றி நிம்மதியான பயணம்:பயணி திலகவதி நாச்சியார் கூறியதாவது: 3வது முறையாக இப்படியான ஓர் சுற்றுலாவிற்கு தனியாக பயணிக்கிறேன். முதியோர் என்பதால் பயணத்தின் போது முக்கியமாக கருதப்படுவது பாதுகாப்பு. மேலும் காப்பீடு உள்ளடங்கியதால் எவ்வித அச்சமும் இன்றி பயணிக்க வசதியாக உள்ளது. யாரை எதிர்பார்க்காமலும் துணையில்லாமலும் செல்வதற்கு ஏதுவாக இப்பயணம் உள்ளது, என்றார்.
குறைந்த செலவில் நிறைந்த பயணம்; பயணி லட்சுமி கூறியதாவது: இப்பயணத்தின் தகவலை தினமலர் நாளிதழில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். ரயிலில் உணவு, காப்பீடு என அனைத்து வசதிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியாக செல்லவேண்டுமென்றால் செலவு இதை விட பல மடங்கு அதிகமாகும். குறைந்த செலவில் தொலைவில் இருக்கும் பிரசித்தி பெற்ற ரிஷிகேஷ் கோவிலுக்கு செல்வது மகிழ்ச்சி. ஹெலிகாப்டரில் பயணிப்பது, ருத்ரபிரயாக் கார்த்திக் சுவாமி கோவிலுக்கு செல்வதில் ஆவலாக உள்ளோம் என்றார். இந்த ரயிலில் செல்லும் பயணிகள், குப்தாகாஷியில் இருந்து கேதர்நாத்திற்கு ஹெலிகாப்டரில் அழைத்துச்செல்லப்படுவார்கள். பின் அங்கிருந்து ருத்ரபிரயாக் கார்த்திக் சுவாமி கோவிலில் இவர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.