திருப்புவனம்; திருப்புவனம் அருகே பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஆனி மாதம் முதல் வெள்ளிகிழமை, பௌர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று, இங்கு வாரம் தோறும் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு கிழமைகளில் பெண் பக்தர்கள் கூட்டம் அலைமோதும், பௌர்ணமி காலங்களில் மதியம் ஒரு மணி உச்சிகால பூஜையில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வது வழக்கம்,
இன்று ஆனி மாத முதல் பௌர்ணமி வெள்ளிகிழமையை முன்னிட்டு உச்சி கால பூஜையில் பங்கேற்பதற்காக பெண் பக்தர்கள் காலை முதலே காத்து கிடந்தனர். பௌர்ணமி வெள்ளிகிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மதியம் ஒரு மணிக்கு உச்சி கால பூஜை நடந்தது. அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு எலுமிச்சம்பழம் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஆனி பௌர்ணமி வெள்ளி கிழமை பூஜையை முன்னிட்டு கோயில் செயல் அலுவலர் ஞானசேகரன் தலைமையிலான அதிகாரிகள் பலத்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்திருந்ததால் பக்தர்கள் சிரமமின்றி அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.