ஆடி பூஜைகளுக்கு சபரிமலை நடை 15ல் திறப்பு; மாத பிறப்பு வித்தியாசத்தால் பக்தர்கள் குழப்பம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2024 03:07
நாகர்கோவில்; ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை ஒரு நாள் முன்னதாக வரும் 15ம் தேதி திறக்கிறது. 20 வரை பூஜைகள் நடைபெறும்.
எல்லா தமிழ் மாதமும் முதல் ஐந்து நாட்கள் சபரிமலையில் பூஜைகள் நடைபெறும். இதற்காக அதற்கு முந்தைய மாதம் கடைசி நாளில் மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படுவது வழக்கம். தமிழ்நாட்டில் ஆடி ஒன்றாம் தேதி ஜூலை 17ல் வருகிறது. ஆனால் கேரளாவில் 16ல் ஆடி ஒன்றாகும். இதனால் சபரிமலை நடை 15 மாலை 5:00 மணிக்கு திறக்கிறது. அன்று பூஜைகள் எதுவும் இருக்காது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். 16 அதிகாலை 5:00 க்கு நடை திறந்ததும் தந்திரி மகேஷ் மோகனரரு ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்திய பின் நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். எல்லா நாட்களிலும் கணபதி ஹோமம், உஷ பூஜை, உச்ச பூஜை, களபாபிஷேகம், கலசாபிஷேகம், மாலையில் தீபாராதனை இரவு அத்தாழ பூஜை ஆகியவை நடைபெறும். இவற்றுடன் தினமும் இரவு 7:00 மணிக்கு படி பூஜை நடைபெறும்.எல்லா நாட்களிலும் காலை முதல் இரவு வரை நடைபெறும் உதயாஸ்தமன பூஜையும் உண்டு. 20 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். 17 ஆடி முதல் தேதி என்பதை கணக்கில் கொண்டு 21 வரை பூஜைகள் நடைபெறும் என நினைத்து பக்தர்கள் சபரிமலை சென்று விட வேண்டாம் என்று தேவசம்போர்டு கேட்டுக்கொள்கிறது. 20ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு விடும்.