நத்தம் ஆண்டிச்சாமி கோயில் திருவிழா 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2024 11:07
நத்தம்; கவரயபட்டி ஆண்டிச்சாமி கோயில் திருவிழாவில் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நத்தம் அருகே ரெட்டியபட்டி ஊராட்சியில் கவரயபட்டி வெள்ளைமலை மேல் உள்ள ஆண்டிச்சாமி கோயில் திருவிழா 7 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் திருவிழாவாகும். இக்கோயிலின் விழா இந்த ஆண்டு நேற்று முன்தினம் மாலை கிராம தெய்வங்களுக்கு கனி எடுத்து வைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று காலை வெள்ளை மலை மேல் குடி கொண்டிருக்கும் ஆண்டிச்சாமி நேர்ச்சை செய்த வேல்களை கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.அதைத் தொடர்ந்து மதியம் ஆண்டிச்சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து பூஜை படையல் படைத்து வழிபட்டனர். பின்னர் கிராம தெய்வங்கள் வீதி உலா வந்து உத்தரவு கொடுத்தல் நடந்தது. இதைத் தொடர்ந்து 150 சிப்பம் அரிசியில் சமையல் செய்யப்பட்ட சாதம் குவித்து வைக்கப்பட்டு பொறியல், காய்கறிக் கூட்டு, சாம்பார், ரசம், பாயாசம், அப்பளம், கேசரி உள்ளிட்ட உணவு வகைகள் அடங்கிய அறுசுவை உணவு அன்னதானம் நடந்தது. இது ஊரில் கோயில் உள்ள மந்தையில் அமர வைத்து பரிமாறினர் . இந்த அன்னதானம் பிற்பகல் முதல் இரவு வரை நடந்தது. இதில் கவரயபட்டி, வத்திபட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, பரளி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அன்னதானத்தில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கவரய பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.