ஊர்க்காவலன் சுவாமி கோயிலில் ஆடி தீர்த்த உற்சவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2024 03:07
திருப்புவனம்; திருப்புவனம் அருகே வில்லியரேந்தல் ஊர்க்காவலன் சுவாமி கோயிலில் ஆடி தீர்த்த உற்சவ விழாவை ஒட்டி பக்தர்கள் பால்குடம் ஏந்தி வந்தனர். வில்லியரேந்தலில் பழமை வாய்ந்த ஊர்க்காவலன் சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் அழகர்கோயிலில் இருந்து பக்தர்கள் நீராடி, தீர்த்தம் எடுத்து வந்து ஆடி தீர்த்த உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு திருவிழா 17ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினசரி ஊர்க்காவலன் சுவாமிக்கும் முத்தையா சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை ஊர்க்காவலன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலை 10 :00 மணிக்கு பக்தர்கள் பால்குடம் ஏந்தி வலம் வந்து அபிஷேகம் செய்தனர். ஆடிக்கிருத்திகை, ஆடி செவ்வாய் கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை மூன்று மணி வரை அன்னதானம் நடந்தது. ஆடி தீர்த்த உற்சவ விழாவிற்கான ஏற்பாடுகளை வில்லியரேந்தல் கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.