பதிவு செய்த நாள்
04
ஆக
2024
11:08
ஆத்துார்; சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே அம்மம்பாளையத்தில் அணைக்கட்டுராயன், கருப்பசாமி கோவில் உள்ளது. கருமந்துறை, கல்லுாரை சேர்ந்த ரமேஷ்குமார், 33, பூசாரியாக உள்ளார். தன் மீது கருப்பசாமி வருவதாக கூறி அமாவாசை, வியாழன், வெள்ளியில் அருள்வாக்கு கூறுகிறார். ஆடி அமாவாசையான நேற்று, கறுப்பு உடை அணிந்து, அரிவாள் மீது நின்றும், குதிரை சிலை மீது அமர்ந்தும், சாட்டையுடன் அருள்வாக்கு கூறினார். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் அவர் முன் பணிந்து வழிபாடு செய்தனர். அவர்களுக்கு வாழ்க்கையில் நடக்கும் கஷ்டம், அதன் தீர்வுகளை எடுத்துக்கூறினார்.
‘சுருட்டு’ புகைத்தும், படையலில் வைத்த மதுவை அருந்தியும், தீயில் சுட்டு வைத்த ஆட்டு ஈரலை ‘ருசி’த்தும் அருள்வாக்கு கூறினார். அருள்வாக்கு பெற்ற பக்தர்கள், நேர்த்திக்கடனாக அன்னதானம் வழங்குதல், கோவில் விரிவாக்க கட்டுமான பணிக்கும் உறுதியேற்று சென்றனர். இதில் போதைக்கு அடிமையானவர்கள், பசும்பாலில் சத்தியம் செய்து அணைக்கட்டுராயன், கருப்பசாமியிடம் வழிபட்டனர்.
இதுகுறித்து அம்மம்பாளையம் மக்கள் கூறுகையில், ‘பல்வேறு ஊர்களில் இருந்தும் சுருட்டு பூசாரி கோவிலுக்கு வருகின்றனர். போதைக்கு அடிமையானவர்கள் சத்தியம் செய்து வழிபாடு செய்த பின், அதை மீறும்போது அவர்களுக்கு பக்கவாதம், உடல் நிலை பாதிப்பு ஏற்படுவதாக நம்பிக்கை உள்ளது’ என்றனர்.