பதிவு செய்த நாள்
07
ஆக
2024
12:08
சென்னை; திருப்பூர் மாவட்டம், கோவில்பாளையத்தில் உள்ள தளீஸ்வரர் கோவில் கல்வெட்டு, பராமரிப்பு பணியின்போது வெளிப்பட்டது.
இதுகுறித்த செய்தி, நம் நாளிதழில் வெளியானது. இதையடுத்து, மத்திய தொல்லியல் துறையின் தென்மண்டல இயக்குனர் முனிரத்தினம் தலைமையில், கல்வெட்டு ஆய்வாளர்கள், உதவி இன்ஜினியர்கள் அடங்கிய ஏழு பேர் குழு, நேற்று முன்தினம், கோவிலை ஆய்வு செய்தனர். கோவிலில் இருந்த 6 கல்வெட்டுகளை படியெடுத்துள்ளனர். அதே நாளில், கோவில்பாளையத்துக்கு அருகில் 10 கி.மீ., தொலைவில் உள்ள சேமலை கவுண்டம்பாளையத்தில் உள்ள சிவன் கோவில், சின்னாரப்பட்டியில் உள்ள சிவன் கோவில் ஆகியவற்றில், அப்பகுதி தொல்லியல் ஆர்வலர்களால் அடையாளம் காணப்பட்ட கல்வெட்டுகளையும் ஆய்வு செய்து, படியெடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மத்திய தொல்லியல் துறையின் கீழ், பெங்களூரில் உள்ள தென்மண்டல தொல்லியல் பிரிவின் இயக்குனர் முனிரத்தினம் கூறியதாவது: ‘தினமலர்’ நாளிதழ் செய்தியை, சென்னையில் உள்ள மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள், எங்களுக்கு அனுப்பினர். இதையடுத்து, ஏழு பேரை, கோவில்பாளையம் பகுதிக்கு அனுப்பி படியெடுத்துள்ளோம். அப்பகுதியில் செயல்படும் ‘யாக்கை’ எனும் தொல்லியல் ஆர்வலர் குழு அளித்த தகவலின்படி, சேமலை கவுண்டம்பாளையம் கோவில் சுவரில் உள்ள கல்வெட்டு, நடுகல் கல்வெட்டு, சின்னாரப்பட்டி சிவன் கோவில் நந்தியின் பின்பகுதியில் இருந்த கல்வெட்டு, அய்யனார் சிலை கல்வெட்டு ஆகியவற்றை படியெடுத்தோம். அரிதாக, சின்னாரப்பட்டியில் கிடைத்த கல்வெட்டு, நந்தியின் பின்புறத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அதில், ‘ஸ்வஸ்திஸ்ரீ பெரும்பாலக்குறிச்சியில் இருக்கும் பிராமணன் தேவனாக்கன்னான காமிண்டனே’ என்ற வாசகம் உள்ளது. அதாவது, 10ம் நுாற்றாண்டில், தேவனாக்கன் எனும் காமிண்டன் என்பவர், இந்த நந்தியை நிறுவிய தகவல் உள்ளது. படியெடுக்கப்பட்ட 10 கல்வெட்டுகளின் தகவல்களும், மத்திய தொல்லியல் துறையின் அடுத்தாண்டு இதழில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.