பதிவு செய்த நாள்
09
ஆக
2024
03:08
மாமல்லபுரம்; மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பழங்காலம் முதல் முழுமை பெறாத ராஜகோபுரத்தை, முழுமையாக கட்டி முடிக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ், மாமல்லபுரத்தில் ஸ்தலசயன பெருமாள் கோவில் பிரசித்திபெற்றது. வைணவ 108 திவ்ய தேசங்களில், 63ம் கோவில். இங்கு, ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், பன்னிரண்டு ஆழ்வார்கள் உள்ளிட்ட சுவாமியர் வீற்றுள்ளனர். நிலம் தொடர்பான தோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இக்கோவிலை, கி,பி., 14ம் நுாற்றாண்டில் விஜயநகர பேரரசின் பராங்குச மன்னர் கட்டினார். அதன் நுழைவாயிலில், ராஜகோபுரம் கட்ட முயன்று, கலையம்சத்துடன் அடித்தளம் மட்டும் அமைக்கப்பட்டு, முழுமைபெறாமல் உள்ளது. கோவிலுக்கு உபயதாரர் வாயிலாக, தற்போது திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த பிப்., 1ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது, ராஜகோபுரத்தை சில நிலைகளுக்கு உயர்த்தி, முழுமையாக கட்டப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆழ்வார்களால் பாடல்பெற்ற திவ்யதேச கோவிலாக சிறப்பு பெற்ற இங்கு, ராஜகோபுரம் முழுமை பெறாத மேற்பரப்பில் செடிகள் படர்ந்து, படிப்படியாக சீரழிகிறது. ஆகம முறைப்படி, இதை சில நிலை கோபுரமாக கட்டி, முழுமையாக முடிக்க வேண்டும். கோபுரம் அமைக்க வாய்ப்பில்லை எனில், அடித்தள பகுதி மேற்புற திறந்தவெளியை மூடவேண்டும். இதற்கு கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.