பதிவு செய்த நாள்
09
ஆக
2024
03:08
நயினார்கோவில்;பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில், ஆடிப்பூர விழாவில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
நயினார்கோவிலில் சவுந்தர்ய நாயகி அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு, ஆடிப்பூர திருக்கல்யாண விழா ஜூலை 29 காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் அருள் பாலிக்கிறார். தொடர்ந்து ஆக., 6 காலை தேரோட்டமும், ஆக., 8 அன்று தபசு திருக்கோலத்திலும் வலம் வந்தார். இன்று காலை 9:00 மணி தொடங்கி நாகநாத சுவாமி, சவுந்தர்ய நாயகி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. ஆடி 4வது வெள்ளிக்கிழமையையொட்டி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு சுவாமி, அம்பாள் ரதத்தில் ஏறி வந்தனர். இந்நிலையில் தினமும் இரவு அம்மன் வீதி உலா வரும் நிலையில், கோயில் கோபுரங்கள் மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் மின்விளக்கு வெளிச்சமின்றி உள்ளது. மேலும் திருக்கல்யாண மண்டபம் முழுவதும் தேவையற்ற பொருட்கள் குப்பையாக அடைந்து கிடப்பதால் அதற்கு முன் தனி மேடை அமைத்து திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. இத்துடன் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர். ஆகவே வரும் நாட்களில் கோயிலை தூய்மையாக வைத்திருப்பதுடன், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர தேவஸ்தான நிர்வாகம், அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.