பதிவு செய்த நாள்
09
ஆக
2024
04:08
அச்சிறுபாக்கம்; அச்சிறுபாக்கம் அருகே பெரும்பேர்கண்டிகை கிராமத்தில், பழமைவாய்ந்த கிராம தேவதையான எல்லையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும், ஆடி மாதம் நான்காவது வார வெள்ளிக்கிழமையில், தீமிதி திருவிழா நடைபெறும். அவ்வகையில், நேற்று காலை 7:00 மணியளவில், குளக்கரையில் இருந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கரகத்துடன், அம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார். பின், 10 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. இதில், காப்பு அணிந்து விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர். பின், மழுவடி சேவையும், அம்மனுக்கு மஹா அபிஷேகம் மற்றும் ஆராதனையும் நடந்தது. மாலை, மங்கல இசையுடன் ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு, மின் விளக்கு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், சிம்ம வாகனத்தில் எல்லையம்மன் வீதி உலா நடந்தது. வீடுதோறும், பெண்கள் கற்பூரம் ஏற்றி, ஆரத்தி எடுத்து அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை, அறநிலையத்துறை அதிகாரிகள், விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும், பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.