பதிவு செய்த நாள்
12
ஆக
2024
04:08
அன்னுார்; குமரன் குன்று கோவிலுக்கு, 11 ஆண்டுகளுக்குப் பிறகு, அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அன்னுார் அருகே பிரசித்தி பெற்ற, குமரன் குன்று, கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இங்கு முருகப்பெருமான் கல்யாண கோலத்தில், குன்றின் மீது வீற்றிருக்கிறார். இங்கு தைப்பூசம் மற்றும் கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இக்கோவிலில், அறங்காவலர்கள் பதவிக்காலம் முடிந்து, 11 ஆண்டுகள் ஆகி விட்டது. 11 ஆண்டுகளாக, அறங்காவலர்கள் இல்லாமல் அதிகாரிகளே நிர்வகித்து வந்தனர். இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன் பிறப்பித்துள்ள உத்தரவில், சண்முகசுந்தரம், சரோஜினி, தாசபாளையம் ராமச்சந்திரன், கணேசபுரம் பழனிச்சாமி, செல்வக்குமார் ஆகிய ஐந்து பேர் குமரன் குன்று கோவில் அறங்காவலர்களாக நியமிக்கப்படுகின்றனர், என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற, 14ம் தேதி அறங்காவலர்கள் கூட்டம் நடத்தி, அதன் பிறகு தங்களுக்குள் அறங்காவலர் குழு தலைவர் தேர்ந்தெடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. குமரன் குன்று கோவிலுக்கு, 11 ஆண்டுகளுக்குப் பிறகு, அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டதால், திருப்பணிகள் வேகமடையும் என பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.