பதிவு செய்த நாள்
16
ஆக
2024
03:08
* காளி என்றால் விரட்டுபவள். எதை விரட்டுவாள் என்றால் தீய வினைகளை விரட்டுபவள். இவள் பாலைவனத்திற்கு உரிய தெய்வம். கொற்றவை, துர்கை, பத்திர காளி என்றும் அழைக்கப்படுகிறாள். நீலநிறம் கொண்ட இவளின் கைகளில் வாள், சக்கரம், கதை, அம்பு, வில், இரும்புத்தடி, சூலம், குத்துவாள், அசுரனின் தலை, சங்கு ஆகியவற்றைத் தாங்கியிருக்கிறாள். முனிவர்கள், தேவர்கள், ஞானிகளை துன்பப்படுத்திய அரக்கர்களான மது, கைடபரை அழித்தாள்.
* மந்திரங்களுக்கு எல்லாம் தலைவி என்பதால் மந்திரவாதிகளின் இஷ்ட தெய்வம் இவளே.
* காவியங்கள் படைத்த கவி காளிதாசருக்கு அருள் செய்தவள் உத்திரபிரதேசம்
உஜ்ஜயினி காளி.
* விழுப்புரம் திருவெண்ணெய்நல்லுார் வைரபுர மாகாளி தன் சூலத்தால், கம்பரின் நாவில் மந்திரம் எழுதியதால் கல்வியில் சிறந்து விளங்கினார்.
* ஒட்டக்கூத்தருக்கு தீவட்டி ஏந்தி வழிகாட்டி உதவினாள் திருவொற்றியூர் காளி.
* மன்னரான வீரசிவாஜிக்கும், மகாகவி பாரதியாருக்கும் இஷ்ட தெய்வமாக விளங்கியவள் சென்னை தம்புச்செட்டித் தெருவிலுள்ள காளிகாம்பாள்.
* ஹிந்து மதத்தின் பெருமையை உலகறியச் செய்த விவேகானந்தரின் குருநாதர் ராமகிருஷ்ண பரஹம்சர். இவர் கோல்கட்டா தட்சிணேஸ்வரம் காளிகோயிலில் பூஜை செய்தவர்.
* பெரம்பலுார் சிறுவாச்சூர் மதுரகாளி, நாகப்பட்டினம் அம்பகரத்துார் மதுரகாளி, சிவகங்கை திருப்புவனம் மடப்புரம் காளி ஆகியோர் உக்கிரமானவர்கள்.
* ஊர்த்தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் விளங்கும் காளியை வழிபட்டால் துக்கம், பயம் நெருங்காது.
யாதுமாகி நின்றாய் - காளி
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை எல்லாம்-- காளி
தெய்வ லீலை அன்றோ?
பூதம் ஐந்து மானாய் --காளி
பொறிகள் ஐந்து மானாய்
போதமாகி நின்றாய்-காளி
பொறியை விஞ்சி நின்றாய்.
இன்பமாகிவிட்டாய் - காளி
என்னுள்ளே புகுந்தாய்
பின்பு நின்னையல்லால் - காளி
பிறிது நானுமுண்டோ?
அன்பளித்துவிட்டாய் - காளி
ஆண்மை தந்துவிட்டாய்
துன்ப நீக்கிவிட்டாய் - காளி
தொல்லை போக்கிவிட்டாய்.