பதிவு செய்த நாள்
16
ஆக
2024
03:08
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தமங்கலம் மடக்கோட்டை முனீஸ்வரர் கோயிலில், ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு, கோயிலில் 200 கிடாய்கள் பலியிடப்பட்டு, பக்தர்களுக்கு அசைவ விருந்து அன்னதானம் நடைபெற்றது.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தமங்கலம் மாடக்கோட்டை முனீஸ்வரர் கோயில் பிரசித்தி பெற்று விளங்கி வருகிறது. இக்கோயிலில் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை வைகாசி மாதத்தில் பூக்குழி மற்றும் பூச்சொரிதல் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே நேரத்தில், ஆண்டு தோறும் ஆடி கடைசி வெள்ளி அன்று, பக்தர்கள் நேர்த்திக் கடனாக அளிக்கும் கிடாய்கள் பலியிடப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அதன்படி ஆடி கடைசி வெள்ளியான இன்று கோயிலில் 200க்கும் மேற்பட்ட ஆட்டு கிடாய்கள் பலியிடப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். தொடர்ந்து சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வந்திருந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கோயில் வளாகத்தில் அசைவ கறி விருந்து அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி கருப்பத்தேவர், விழா குழு தலைவரும், சென்னை மாநகராட்சி கணக்கு மற்றும் நிதிக் குழு தலைவருமான தனசேகரன் செய்திருந்தார்.