ஆனந்தக்கோன் காலத்து கல்வெட்டு செஞ்சி கோட்டையில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2024 10:08
செஞ்சி; செஞ்சி கோட்டையை கட்டிய மன்னர்களில் ஒருவரான ஆனந்த கோன் காலத்தை சேர்ந்த கல்வெட்டை, ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
செஞ்சி கோட்டை தொல்லியல் கழக நிறுவனர் லெனின், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் முனுசாமி, வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் ஆகியோர் அடங்கிய குழு செஞ்சி கோட்டை கிருஷ்ணகிரி மலை கோட்டை மீது கள ஆய்வு செய்தனர். அதில், அங்குள்ள ராஜகோபால் சுவாமி கோவில் வாயிற் படியில் கி.பி., 13ம்் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு ஒன்று இருப்பதை கண்டு பிடித்தனர்.
இது குறித்து ஆய்வாளர்கள் லெனின், முனுசாமி ஆகியோர் கூறியதாவது; செஞ்சி கோட்டையை முதலில் கட்டியவர் ஆனந்தக்கோன். அதனை தற்போது ராஜகிரி என அழைக்கப்படுகிறது. இரண்டாவதாக கிருஷ்ணகிரி கோட்டையை கிருஷ்ணக் கோன் கட்டினார். அடுத்து அவர்களின் வாரிசுகளான கோனேரிக்கோன், கோவிந்தக்கோன், புலியக்கோன் ஆகியோர் கோட்டையை விரிவுப்படுத்தினர். இவர்களின் காலம் கி.பி 1200 துவங்கி கி.பி 1330 வரை 130 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். இந்த தகவல்களை கர்நாடக ராஜாக்கள் சவிஸ்தார சரித்திரம் என்ற நூலிலும், 1807ம் ஆண்டு ஆற்காடு கலெக்டராக இருந்த கர்னல் வில்லியம் மல்லியாட் வேண்டுகோளின்படி நாராயணன் எழுதிய நுாலிலும், அண்ணாமலை பல்கலை வரலாற்று பேராசிரியர் சீனிவாச்சாரியும், இந்திய தொல்லியல் துறை ஓய்வு பெற்ற அலுவலர் சேஷாத்திரியும் உறுதி செய்துள்ளனர். இருப்பினும், இதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. தற்போது செஞ்சியில் உள்ள கிருஷ்ணகிரி கோட்டையில் கிடைத்துள்ள கல்வெட்டில் கொநெரிகொன் .கோவிந்தன் சத செர்வை என உள்ளது. இதன். பொருள் கோனேரிக்கோன் மகன் கோவிந்தன் சதா இறைவனை வணங்கிய நிலையில் உள்ளார் என்பதாகும். கோனேரிக்கோன் செஞ்சி கோட்டையை கி.பி 1270 முதல் கி.பி 1290 வரை ஆட்சி செய்துள்ளார். அவர் காலத்தில் இந்த கல்வெட்டு வடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டின் மூலம் செஞ்சி கோட்டையை கட்டியவர்கள் குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லி உள்ள தகவல்களுக்கு உரிய கல்வெட்டு ஆதாரம் முதன் முறையாக கிடைத்துள்ளது என்றனர்.