திருவண்ணாமலையில் விடிய, விடிய கிரிவலம் சென்ற பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2024 11:08
திருவண்ணாமலை; திருவண்ணாமலையிலுள்ள அண்ணாமலையார் மலையை பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வர். ஆவணி மாத பவுர்ணமி திதி நேற்று அதிகாலை, 3:07 மணிக்கு தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு முதலே, பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து, கிரிவலம் செல்ல தொடங்கினர். ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். பகலை விட மாலையில் கிரிவலத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. பவுர்ணமி திதி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை, 1:02 மணியளவில் நிறைவடைந்த நிலையிலும், பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர். போலீசார் திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதையில் தொடர்ந்து ரோந்து பணியிலும், போக்குவரத்தை சீர்செய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.