சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனக சபை மீது பக்தர்கள் தரிசனம் செய்ய தடை இல்லை; உயர்நீதிமன்றம் உத்தரவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2024 04:08
சென்னை: ஆறு கால பூஜை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் கனகசபை மீது நின்று தரிசனம் செய்வதை தடுக்க கூடாது என சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இறைவன் இத்தலத்தில், நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருமாகவும் அருள்பாலிக்கிறார். சைவத்தில் கோயில் என்றால் அது சிதம்பரத்தைக் குறிக்கும். இத்தகைய சிறப்பு மிக்க சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழாவில் கடந்த ஆண்டு உற்சவத்தின் போது, கனகசபை மீதேறி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் அனுமதிக்காமல் தடை செய்தனர். அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் தொடுத்த வழக்கில், உயர்நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவிட்டுள்ளது. அதில் கனகசபையில் ஏறி, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய உத்தரவு பிரப்பிக்கப்பட்டது. ஆறு கால பூஜை நேரம் தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் கனக சபை மீது நின்று தரிசனம் செய்யலாம். பக்தர்களை தடுக்க கூடாது என பொது தீட்சிதர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஆனி திருமஞ்சன தரிசன விழாவில் கனகசபை மீதேறி தரிசனம் குறித்த இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.