காஞ்சிபுரம்; பெரிய காஞ்சிபுரம், செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாள் கோவிலில் ஆடி திருவிழாவின் நிறைவு நாளான நேற்று, மூலவர் அம்மன் சாந்த சொரூபிணி அலங்காரத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து ஊஞ்சல் சேவை உற்சவமும், பாஞ்சாலி சபதம் குட்டைகூத்தும் நடந்தது. காஞ்சிபுரம் மாநகராட்சி 27வது வார்டுகன்னிகாபுரம், கன்னியம்மன், வேலாத்தம்மன் கோவில் 27வது ஆண்டு ஆடி திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு அம்மன் வீதியுலா நடந்தது. இதில், மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய கன்னியம்மன், வேலாத்தம்மன் முக்கிய வீதி வழியாக உலா வந்தனர். காஞ்சிபுரம் ஓரிக்கை கண்ணகிபுரம் படவேட்டம்மன், பச்சையம்மன், துர்கையம்மன் கோவில் 46வது ஆண்டு ஆடி திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய படவேட்டம்மன், பச்சையம்மன், துர்கையம்மன் வீதியுலா வந்தனர். வழி நெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து அம்மனை வழிபட்டனர்.