புதுக்கோட்டை; புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே திருவரங்குளத்தில் புகழ்பெற்ற பெரியநாயகி அம்மன் உடனுறை அரங்குளநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில், வைகாசி விசாகம், ஆடிப்பூர திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். வைகாசி விசாகம், ஆடிப்பூரத்தை முன்னிட்டு தேர் திருவிழாவில், ஜாதி பேதமற்ற முறையில் பட்டியல் இன மக்கள் முறைப்படி, அவர்கள் சாமி ஆடி வந்து, சிறப்பு பூஜைகளில் பங்கேற்று, தேரை அவர்கள் தான் முதலில் வடம் பிடித்து இழுத்து வைப்பர் என்பது ஐதீகம். இக்கோவிலில், 1984 மற்றும் 2011ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது, ராஜகோபுரத்தில் செடிகள் வளர்ந்தும், இடிந்த நிலையில் இருப்பதால், கோபுரத்தில் உள்ள சுவாமி சிலைகள் பெயர்ந்து கீழே விழ வாய்ப்புள்ளது. ராஜகோபுரம் மேல் பகுதியில் இடிந்துள்ளதை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே கோவில் கோபுரத்தை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.