பதிவு செய்த நாள்
29
ஆக
2024
05:08
பல்லடம்; பல்லடம் சந்தைப்பேட்டை ஐயப்பன் கோவிலில், நாளை காலை கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
பல்லடம் சந்தைப்பேட்டை ஸ்ரீஐயப்பன் கோவில், கடந்த, 1987ம் ஆண்டு, ராஜகுரு சங்கரய்யர் மூலம் முதன் முதலாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, ஐயப்ப பக்தர்கள் குழுவினரால் பராமரிக்கப்பட்டு வரும் இக்கோவில், 2011ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இங்கு, ஐயப்பன் மூலவராகவும், கன்னிமூல கணபதி மற்றும் மாளிகைபுரத்து அம்மன் பரிவார தெய்வங்களாகவும் உள்ளனர். ஆண்டுதோறும் நடக்கும் கார்த்திகை மாத மண்டல பூஜை மற்றும் 108 சங்கு கலச அபிஷேகம் இக்கோவிலில் பிரசித்தி பெற்றது. சித்திரை 1, மகரஜோதி மற்றும் மாதாந்திர உத்திர நட்சத்திர நாளில், ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்கும். ஐயப்ப பக்தர்களின் முயற்சியால், 13 ஆண்டுக்குப் பின் நாளை மீண்டும் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. முன்னதாக, நேற்று விநாயகர் பூஜை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. மாலை 6.00 மணி முதல் வாஸ்து சாந்தி, கும்ப ஸ்தாபனம், முதல் கால யாக பூஜை, பூர்ணாஹூதி உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன. இன்று காலை 9.00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், மாலை 5.00 மணிக்கு மூன்றாம் காலையாக பூஜையும் நடந்தன. நாளை காலை நான்காம் கால யாக பூஜையும், இதையடுத்து, 8.30 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கூனம்பட்டி திருமடம் நடராஜ சுவாமிகள் மற்றும் அருள்மலை தோரணவாவி குமார சிவஞான சிவாச்சாரியார் ஆகியோர் கும்பாபிஷேக விழாவை நடத்தி வைக்க உள்ளனர்.