63 நாயன்மார்களுள் ஒருவரான இளையான்குடி மாற நாயனார் குருபூசை விழா வருடம் தோறும் ஆவணி மாதம் மகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டிற்கான குருபூசை விழா சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட ராஜேந்திர சோழீஸ்வரர், ஞானாம்பிகை கோயிலில் உள்ள மாறனாயனார் புனிதவதி அம்பாள் சன்னதியில் இன்று காலை துவங்கியதையடுத்து காலை 9:00 மணிக்கு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று மூலவர் ராஜேந்திர சோழீஸ்வரர், ஞானாம்பிகை அம்பாள், மாறநாயனார், புனிதவதி அம்பாள்,உற்சவமூர்த்திகளுக்கு பால், பன்னீர், சந்தனம், குங்குமம், பழங்கள் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டு அபிஷேக,ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடந்தது. விழாவில் இளையான்குடி பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் தமிழகம் முழுவதிலுமிருந்தும் ஏராளமான சிவனடியார்களும் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இளையான்குடி மாறனாயனார் அடியார் திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர். இதேபோன்று இளையான்குடியில் உள்ள மாற நாயனார் மடத்திலும் சிறப்பு பூஜைகளும் அன்னதானமும் நடைபெற்றது.