பதிவு செய்த நாள்
05
செப்
2024
10:09
நாம் வாழும் இடம், நமக்கு முன் எப்படி இருந்தது, நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தனர், அந்த காலத்தில் என்னென்ன பொருட்களை பயன்படுத்தினர் உட்பட பழங்கால விஷயங்களை அறிந்து கொள்வதில், நம்மில் பலருக்கும் ஆர்வம் அதிகம். கற்கால மக்கள், மன்னர் காலத்து வாழ்வியல் முறைகள் தெரிந்து கொள்வதற்காகவே, பலரும் வரலாறு படிக்கின்றனர். இன்னும் சிலர் தொல்லியல் சம்பந்தமான ஆராய்ச்சி படிப்புகளை விரும்பி படிக்கின்றனர்.
* புராதன எச்சங்கள்; பலர் புராதன நினைவு சின்னங்கள் இருக்கும் பகுதிகளுக்கு சென்று ஆராய்ச்சி செய்வதில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கண்டறியும் ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து மகிழ்கின்றனர். அந்த புராதன எச்சங்களை பார்க்கும் போதே, முன்னோர்கள் இப்படி தான் வாழ்ந்திருப்பர் என்று கணிப்பர். இந்த வகையில், கர்நாடகாவில் ஏராளமான புராதன நினைவு சின்னங்கள், எச்சங்கள் கொட்டி கிடைக்கின்றன. ஹம்பி, பாதாமி, ஹளேபீடு, பேளுர் இப்படி பல புராதன நகரங்களுக்கு நம்மில் பலரும் சென்றிருப்போம். அந்த வரிசையில், பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுகாவில், ஜலசங்வி என்ற புராதன வரலாற்று கிராமம் அமைந்துள்ளது. சாளுக்கிய வம்சத்தின் அரசரான ஆறாம் விக்ரமாதித்தனால் உருவாக்கப்பட்ட ஒரு கிராமம் தான் ஜலசங்வி. இவரது தலைநகரமாக விளங்கியது.
* அழகிய சிற்பங்கள்; பாண்டவ மன்னர்கள் சிறிது காலம் இங்கு வாழ்ந்ததாகவும் வரலாறு கூறுகிறது. ஒரு பெரிய குளக்கரையில், கல்யாண சாளுக்கியா கோவில் அமைந்துள்ளது. ஈஸ்வரனுக்கு இந்த கோவில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளதால், கமலீஸ்வரா கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் வெளிப்புற சுவர்களில், கலை நயத்துடன் கூடிய அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பெண் நடன கலைஞர்களின் பல்வேறு நடன வடிவங்கள் காணப்படுகின்றன. இதை சிலாபஞ்சிக்கா என்று அழைக்கின்றனர். கவர்ச்சியான திரிபங்க நிலையில் பெண் சிலைகள் காணலாம். நட்சத்திர வடிவில் கோவில் காட்சியளிக்கிறது. இந்த பெண் சிலைகளின் மூலம், பேளுர், ஹளேபீடு பகுதிகளில் பெண் சிலைகள் வடிவமைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்கள், ஜலசங்வி கிராமத்துக்கு வந்தால், ஒரு சிறந்த விருந்தாக அமைவதை மறுக்க முடியாது. கோவிலின் அருகில் பல புராதன எச்சங்கள் உள்ளன. இவற்றை, இந்திய தொல்லியில் துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.
* இரட்டிப்பு; வார நாட்களில் ஓரளவு எண்ணிக்கையில் தான் சுற்றுலா பயணியர் வருவர். வார இறுதி நாட்களில் கூட்டம் இரட்டிப்பாக இருக்கும். ஜலசங்விக்கு வருவோர், 34 கி.மீ., துாரத்தில் உள்ள பசவகல்யாண்; 12 கி.மீ., துாரத்தில் உள்ள ஹும்னாபாத் வீரபத்ரேஸ்வரா கோவில்; 46 கி.மீ., துாரத்தில் உள்ள பீதர் கோட்டை ஆகியவற்றை பார்க்கலாம்.
எப்படி செல்வது?; பெங்களூரில் இருந்து 700 கி.மீ., துாரத்திலும்; பீதரில் இருந்து 45 கி.மீ., துாரத்திலும் ஜலசங்வி புராதன கிராமம் அமைந்துள்ளது. பீதர், ஹும்னாபாத்தில் இருந்து பஸ் வசதி உள்ளது. ஹும்னாபாத் ரயில் நிலையத்தில் இருந்து, பஸ், ஆட்டோக்களில் செல்லலாம். ஹோட்டலில் தங்குவதற்கு, ஹும்னாபாத் செல்ல வேண்டும். சொந்த வாகனத்தில் சென்றால், கூடுதல் இடங்களை பார்க்கலாம். வெயில் அதிகமாக இருப்பதால், மழை மற்றும் குளிர்காலத்தில் செல்வது சிறந்தது. - நமது நிருபர் -