பதிவு செய்த நாள்
10
செப்
2024
10:09
உசிலம்பட்டி; மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலைப்பட்டி கிராமத்தில் பெரும்பாலான மக்கள் வடமாநிலங்களில் முறுக்கு தொழில் மற்றும் ஹோட்டல் நடத்தி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவை அந்த மாநிலங்களில் நடக்கும் விழா போல் ஆண்டு தோறும் விமரிசையாக நடத்துகின்றனர்.
இந்த ஆண்டு விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைத்து வழிபாட்டின் போது விநாயகர் கையில் லட்டு ஒன்றை வைத்திருந்தனர். வழிபாடு முடிந்த பின் அருகில் உள்ள கண்மாய் பகுதியில் கரைக்க ஊர்வலமாக எடுத்து செல்வதற்கு முன்பாக அவரது கையில் இருந்த லட்டை கிராம மக்கள் ஏலத்திற்கு விட்டனர். ஒவ்வொருவராக விலை கேட்டதில் ஏற்பட்ட போட்டியைத் தொடர்ந்து, அதே கிராமத்தைச் சேர்ந்த முறுக்கு வியாபாரி மூக்கன் அதிகபட்ச விலையாக ரூ. 1 லட்சத்து 51 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார். மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள், அடுத்து வரும் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது விநாயகர் சிலையில் வைத்து பூஜை செய்யப்படும் லட்டு ஏலம் விடப்படும் என அறிவித்தனர். மேலும் அதிக விலைக்கு ஏலம் எடுத்த மூக்கனுக்கு, ஏலத் தொகையை கட்டும் போது 1 பவுன் தங்க மோதிரம், 10 வேஷ்டி, சட்டை, 5 சேலைகள் பரிசாக வழங்கப்படும் எனவும் அறிவித்தனர்.