பதிவு செய்த நாள்
10
செப்
2024
11:09
துாத்துக்குடி; துாத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நவதிருப்பதி தலங்களில் எட்டாம் தலமாகவும், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில் விளங்குகிறது.
இழந்த செல்வத்தை தேடி எடுத்துக் கொண்டு, குபேரன் வணங்கும் ஜோதியாய் அருள்பாலித்த ஸ்தலமான இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி பெருவிழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா ஆகஸ்ட் 30ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில், சுவாமி மற்றும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள், வீதி உலா நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. அதிகாலையில் திருமஞ்சனம், விஸ்வரூபம், நித்தியல் கோஷ்டி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து, சுவாமி வைத்தமாநிதி பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார். தீபாராதனைக்கு பின், ‘கோவிந்தா, கோபாலா’ கோஷத்துடன் திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். ரத வீதிகளை சுற்றி வந்த தேர், மீண்டும் நிலையை வந்தடைந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.