பதிவு செய்த நாள்
19
செப்
2024
11:09
மதுரை; இந்துக் கோயில்கள் நம் நாட்டின் பரம்பரியமான சொத்து. கோயிலின் சொத்துக்களை அபகரிப்போரை கேள்வி கேட்க வேண்டும். அதைக் காக்கும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு என வடகுடி ஸ்ரீ சுந்தரராம தீக்ஷிதர் பேசினார்.
மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பில், ஸ்ரீ சங்கரர் சரித்திரம் தொடர் உபன்யாச நிகழ்வு ஆண்டாள்புரம் வசுதாரா குடியிருப்பு கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்று வருகிறது. நிகழ்வில், நேற்று வடகுடி ஸ்ரீசுந்தரராம தீக்ஷிதர் பேசியதாவது; தொட்டதெல்லாம் பொன்னாக்கும் ஆற்றல் ஸ்பரிசமணிக்கு உண்டு. அதை விட உயர்ந்தவர் குரு. தன் சீடர்களையெல்லாம் ஞானம் பெற வைப்பவர். அந்த சீடர்களும் குரு ஆகுவர். அத்தகைய குரு, ஸ்ரீஆதிசங்கரர். ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருந்த போது பிறந்தவர். அவரது சரிதம் கேட்பது புண்ணியம். இந்து மதத்தைக் காக்கப் பிறந்தவர். இந்து மதத்தையும், இந்து கோயில்களையும் காக்கும் பொறுப்பு மக்கள் அனைவருக்கும் உண்டு. கோயில் சொத்துக்களை யார் அபகரித்தாலும், கேள்வி கேட்க வேண்டும். கோயில் சொத்துக்களை நாம்தான் காக்க வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். மோகினி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு வந்த இடம் திருமோகூர். இவர்தான் ஐயப்பனின் அம்மா. எனவே மதுரை தான் சபரிமலை ஐயப்பனுக்கு தாய் வீடு ஆகும். நம் வீடும் கோயில் போன்றதுதான். அங்கு வாசலை உயரம் குறைவாக அமைக்க வேண்டும். அதில், குனிந்துதான் செல்ல வேண்டும். பெரிய வாசலுடன் வீடு கட்டும்போது, நிம்மதி போய்விடுகிறது. உறவுகளை நாம் மதிக்க வேண்டும். சொந்த பந்தங்களுக்கு உள்ளேயே நல்லது, கெட்டதுகளை பகிர்ந்து கொள்வதில்லை. 20 ஆண்டுகளுக்கு மேல் நண்பர்களாக இருந்தவர்கள், திடீரென பிரிந்து விடுகிறார்கள். இவ்வாறு இருக்கக்கூடாது. திருமணத்தை சரியான காலத்தில் நடத்திவிட வேண்டும். பெரியவர்கள் சென்ற பாதையை நாம் மீறியபோதே, நாம் தோற்று விட்டோம். பழமையை மீறாத போது, துன்பங்கள் வருவதில்லை. முடிந்தவரை இல்லாதோருக்கு தானம் செய்யுங்கள். பத்து தலைமுறைக்கு சொத்து வைத்திருப்போர்க்கும், இந்த மனம் வருவதில்லை. அன்னதானம் செய்வது உயிரைக் காப்பது. அதனாலதான், உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோர் என்றார் அவ்வையார். ஆதிசங்கரர் உஞ்சவிருத்தி என்னும் தானம் பெற்றுதான் சாப்பிட்டார்". இவ்வாறு அவர் பேசினார். செப்.20 வரை தொடர் உபன்யாசம் நடக்க உள்ளது. அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடுகளை செய்திருந்தார்.