பதிவு செய்த நாள்
20
செப்
2024
05:09
திருப்பூர்; நவராத்திரி விழாவில் கொலுவில் அலங்கரித்து வைக்கப்படும் பொம்மைகள் விற்பனை திருப்பூரில் துவங்கியது.
துர்க்கை அம்மனை ஒன்பது வடிவங்களிலான அவதாரத்தில் வழிபடும் விழா, நவராத்திரி விழாவாக, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும். அதையொட்டி, வீடுகள், கோவில்களில் கொலு வைத்து ஒன்பது நாட்கள் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடத்தப்படும். இதன் நிறைவு நாள் சரஸ்வதி பூஜையாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், இந்தாண்டு நவராத்திரி விழா, அக்.,3ம் தேதி துவங்குகிறது. கொலுவில் பல்வேறு வகையான தெய்வங்கள் உள்ளிட்ட சிலைகள் அலங்கரித்து வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். அவ்வகையில், கொலுவை அலங்கரிக்கும் விதமாக ஏராளமான சிலைகள் தற்போது திருப்பூரில் விற்பனைக்கு வந்துள்ளது. அவ்வகையில், திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியிலுள்ள படியூர் சர்வோதய சங்க விற்பனை மையத்தில், கொலு பொம்மைகள் விற்பனை துவங்கியுள்ளது. மதுரை மற்றும் காஞ்சிபுரம் பகுதியிலிருந்து இந்த பொம்மைகள் தருவிக்கப்படுகின்றன.
பல வடிவத்தில் சிலை; வடிவிலான விநாயகர் சிலைகள், ராஜ அலங்கார முருகன், பிரதோஷ வழிபாடு உமா மகேஸ்வரர், பெருமாளின் விஸ்வரூப தரிசனம், முப்பெரும் தேவியர், கொல்கத்தா காளி, காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, பள்ளி கொண்ட பெருமாள், சுதர்சனர் – சக்கரத்தாழ்வார், தட்சிணாமூர்த்தி, நரசிங்க பெருமாள், கருப்பராயர் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களின் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. தெய்வ உருவங்கள் மட்டுமின்றி, புராணக் காட்சிகளை விளக்கும் ஸ்ரீராமர் பட்டாபிஷேகம், கோவர்த்தன மலையை தாங்கி நிற்கும் கிருஷ்ணர், காளிங்க நர்த்தனம் போன்ற காட்சிகளை விளக்கும் ‘செட்’ பொம்மைகள் உள்ளன. இதுதவிர, திருமணம், வளைகாப்பு, காதணி விழா, கிரஹப்பிரவேசம், திருவிளக்கு பூஜை போன்ற மங்களகரமான நிகழ்வுகள், பள்ளிக்கூடம் அமைந்துள்ள செட்களும், தலைவர்கள், மகான்கள் பொம்மைகளும் இடம் பெற்றுள்ளன.