பதிவு செய்த நாள்
21
செப்
2024
08:09
புதுக்கோட்டை; புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.,வும்., முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் முயற்சியால், மலை மீது தார் சாலை அமைக்கப்பட்டது. கோவிலுக்கு செல்லும் மலைப் பாதையில், சிவபெருமான், விநாயகர், அறுபடை வீடுகளின் முருகன், மான், சிங்கம், குரங்கு போன்ற சிமென்ட் சிலைகள் அமைக்கப்பட்டு அழகாக காட்சியளித்தன. இந்த சிலைகள், சமூக விரோதிகளால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன. இது, நேற்று காலை கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த விராலிமலை போலீசார் விசாரிக்கின்றனர். ஏற்கனவே, சில மாதங்களுக்கு முன் இது போன்ற சம்பவம் நடைபெற்று புகார் அளித்தும், மீண்டும் அதே போல நடந்து உள்ளது. விராலிமலை கோவில் மலைப்பாதையில், போலீசார் ரோந்து செல்ல வேண்டும். சிலைகள் அருகில் விஷமிகள் செல்ல முடியாதபடி, தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும். கோவிலில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.