பதிவு செய்த நாள்
21
செப்
2024
08:09
உடுமலை; திருமூர்த்திமலை காண்டூர் கால்வாய் அருகே அமைந்துள்ள சுற்றுக்கோவிலில், புரட்டாசி வெள்ளிக்கிழமையான நேற்று, பாரம்பரிய முறைப்படி சிறப்பு பூஜைகள் நடந்தன.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில், சுதந்திரப்போராட்டத்தில், ஆங்கிலேயர்களுக்கு சிப்ப சொப்பனமாக விளங்கிய எத்தலப்ப நாயக்கர் மற்றும் வீரஜக்கம்மாள், மாங்கல்யேச கணபதி மற்றும் வீரர்கள் எழுந்தருளி வரும், சுற்றுக்கோவில் அமைந்துள்ளது. வீரத்தை போற்றும் இந்த சுற்றுக்கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமையில் எத்தலப்ப நாயக்கர் வம்சா வளியினர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து பாரம்பரியமாக வழிபாடு நடத்தி வருகின்றனர். புரட்டாசி முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, இக்கோவிலில் சிறப்பு பூஜையுடன் வழிபாடு நிகழ்ச்சி தொடங்கியது. எத்தலப்ப நாயக்கரின் குலதெய்வமான ஜக்கம்மாளுக்கு, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், பழச்சாறு, சந்தனம், விபூதி, பன்னீர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட, 16 வகையான திரவியங்களில் மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, எத்தலப்ப நாயக்கர் மற்றும் படை தளபதிகள், போர் வீரர்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், ஜக்கம்மாள், எத்தலப்ப நாயக்கர், அவரது துணைவியார் மற்றும் படை வீரர்கள் எழுந்தருளினர். இதில், முக்கிய நிகழ்ச்சியாக பாரம்பரியம் மற்றும் வரலாற்றை உணர்த்தும் வகையில், பாரம்பரிய இசைக்கருவியான உருமி சத்தத்துடன், தேவராட்டம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை எத்தலப்ப நாயக்கர் வம்சாவளியினர் செய்திருந்தனர்.
வால்பாறை; புரட்டாசி வெள்ளிக்கிழமையான நேற்று, வால்பாறை அடுத்துள்ள அக்காமலை பாலாஜி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமமும், 6:00 மணிக்கு அபிேஷகபூஜையும் நடந்தது. தொடர்ந்து காலை, 6:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் தேவியருடன் பாலாஜி சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமிக்கு நேற்று, காலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷகமும், 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.