பாலக்காடு; பாலக்காடு மாவட்டம் கல்பாத்தியில் உள்ள, விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் தேர் திருவிழாவில், மந்தக்கரை மகா கணபதி கோவில் தேரோட்டம் விமர்சையாக நடந்தது.
திருவிழாவின் முதல் நாளில், விசாலாட்சி சமேத விஸ்வநாதர் சுவாமி, வள்ளி-தேவசேனா சமேத சுப்பிரமணியர், கணபதி சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில், நான்கு வீதிகளிலும் உலா வந்தனர். இரண்டாம் திருநாளான இன்று மந்தக்கரை மகா கணபதி கோவில் திருத்தேரோட்டம் நடந்தது. செண்டை மேளம் முழங்க, சுவாமி திருவீதி உலா நடந்தது. நேற்று பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. மகா கணபதிக்கு ஜெய் , மந்தக்கரை மகா கணபதி ஜெய் என கோஷத்துடன், பக்தர்கள் தேர் வடம் பிடித்து எழுத்தனர். சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக கோவிலில் காலை 5:30 மணிக்கு கணபதி ஹோமம், 6:00 மணிக்கு ருத்ராபிஷேகம், 9:00 மணிக்கு வேத பாராயணம் நடந்தது. தொடர்ந்து உற்சவமூர்த்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலுக்கு எழுந்தருளும் வைபவம் நடந்தது. நாளை பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள் கோவில், சாத் தப்புரம் பிரசன்ன மகா கணபதி கோவில் திருத்தேரோட்டம் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, கல்பாத்தி விசா லாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் அருகே, ஆறு தேர்களின் சங்கமம் நடக்கிறது. திருவிழாவையொட்டி நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏராளமான போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.