பதிவு செய்த நாள்
14
நவ
2024
11:11
திருவாலங்காடு; திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான சோளீஸ்வரர் திருக்கோவில், கனகம்மாசத்திரம் அடுத்த ஆற்காடு குப்பத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு, திருத்தணி, ஆற்காடுகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். இதுதவிர, விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுவர். அதேபோல், சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து திருப்பதிக்கு பாத யாத்திரையாக செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், இக்கோவிலில் தங்கி செல்கின்றனர். எனவே, இங்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் தங்குவதற்கு மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஓராண்டுக்கு முன் சோளீஸ்வரர் கோவில் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, 3.80 கோடி ரூபாயில் மண்டபம் கட்ட தீர்மானிக்கப்பட்டு, கடந்த ஜூலையில் ஆன்லைன் வாயிலாக ‘டெண்டர்’ விடப்பட்டது. நேற்று, ஓய்வறை மண்டபம் கட்ட திருவள்ளூர் தொகுதி தி.மு.க., – எம்.எல்.ஏ., ராஜேந்திரன் அடிக்கல் நாட்டினார். இதில், திருவாலங்காடு தி.மு.க., ஒன்றிய செயலர்கள் ராஜேந்திரன், மகாலிங்கம் மற்றும் திருத்தணி முருகன் கோவில் அதிகாரிகள் உட்பட பலர்பங்கேற்றனர்.