பதிவு செய்த நாள்
16
நவ
2024
08:11
கோவை; கோவையில் உள்ள சிவாலயங்களில் நடந்த அன்னாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஐப்பசி மாதமும், அந்த மாதத்தில் வரும் பவுர்ணமி தினமும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இத்தினத்தில், அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறும். லிங்கத் திருமேனியாக இருக்கும் சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு அந்த அன்னம், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், நேற்று மாலை 4:00 மணிக்கு, பட்டீஸ்வரருக்கு சாயரட்சை அபிஷேகம் நடந்தது. 100 கிலோ சாதம் மற்றும் காய்கறிகளால், பட்டீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. மாலை 5:30 மணிக்கு, சாயரட்சை மகா தீபாராதனை நடந்தது. பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், நேற்று பகல் 12:00 மணிக்கு, வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு, 50 கிலோ சாதத்திலும், கோட்டைக்காட்டில் உள்ள முட்டத்து நாகேசுவரருக்கு, 50 கிலோ சாதத்திலும் அன்னாபிஷேகம் நடந்தது.
மதுக்கரை மரப்பாலம், ஸ்ரீ தர்மலிங்கேஸ்வரர் கோவில், கோட்டைமேடு சங்கமேஸ்வரர், குறிச்சி ஸ்ரீ வடிவாம்பிகை உடனமர் ஸ்ரீ வாலீஸ்வரர் சுவாமி திருக்கோவில், கோவை காந்திபார்க் மகா காளியம்மன் கோவிலில் உள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சகஸ்ர லிங்கம், கோவை சேரன் மாநகர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது.
கோவை சித்தாபுதுாரில் உள்ள நீலகண்டேஸ்வரர் கோவில், கோவை வ.உ.சி., பூங்கா ஆடிஸ் வீதியில், ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் உள்ள வேதபுரீஸ்வரர், மேட்டுப்பாளையம் ரோடு பூ மார்க்கெட் சிவன் கோவில், மேட்டுப்பாளையம் அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில், தடாகம் ரோடு இடையர்பாளையம், அண்ணா நகர் ஸ்ரீ கம்பீர சித்தி விநாயகர் கோவிலில் உள்ள சிவன் கோவிலில், அன்னாபிஷேகம் நடந்தது. இதில், பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.