பதிவு செய்த நாள்
21
நவ
2024
10:11
அவிநாசி; அவிநாசி அருகே சேவூரிலுள்ள ஸ்ரீ பாலசாஸ்தா ஐயப்பன் கோவிலில், திருப்பணிகள் நிறைவுற்று நேற்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
கடந்த, 17ம் தேதி தீர்த்தக்குட ஊர்வலம், கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழாவில், நேற்று அதிகாலை 4:50 மணிக்கு மேல் 5:15 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, கன்னிமூல கணபதி, குருவாயூரப்பன் மற்றும் ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ மாளிகைபுரத்தம்மன், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ நாக தேவதைகள் ஸ்ரீ நவக்கிரகங்கள் உட்பட பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று மாலை கூட்டு வழிபாடு, பஜனை, ஹரிவராசனம் நடைபெற்றது. விழாவில், அகில பாரத ஐயப்ப சேவா சங்க தேசிய செயலாளர் கொய்யம் ஜனார்த்தனன், பாலக்காடு பிரசாந்த், பந்தள ராஜ பிரதிநிதி சங்கர் வர்மராஜா, மஹாசாஸ்த்ரு பிரியதாசன் சாஸ்தா வியாசர் அரவிந்த் சுப்ரமண்யம், தாராபுரம் வரன்பாளையம் திருநாவுக்கரசர் மடாலயம் சிவாச்சலம் ஐயா, அவிநாசி வாகீசர் மடாலயம் காமாட்சி தாச சுவாமி ஆகியோர் பங்கேற்றனர்.
கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, செயலாளர் கோவிந்தசாமி, பொருளாளர் வெங்கடாசலம், துணைதலைவர் கண்ணன், இணை செயலாளர் திருமூர்த்தி மற்றும் டிரஸ்ட் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர். ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில், சேவூர் வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஐயப்பனை வழிபட்டனர்.