பதிவு செய்த நாள்
21
நவ
2024
10:11
திருப்பூர்; திருப்பூர், காலேஜ் ரோடு, ஸ்ரீஐயப்பன் கோவில், 65ம் ஆண்டு மண்டல பூஜை விழா கொடியேற்றம், சபரிமலை பிரதமதந்திரி முன்னிலையில் நேற்று விமரிசையாக நடைபெற்றது.
கொடியேற்று விழாவை முன்னிட்டு, கோவில் வளாகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கொடிமரம் மற்றும் கருவறை கோபுரம் மற்றும் கோவில் வளாகம், வண்ண மலர்களால் தோரணம் கட்டப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு மஹா கணபதி ஹோமம் நடந்தது; மாலையில், சபரிமலை பிரதம தந்திரி மற்றும் ஸ்ரீதர்ம சாஸ்தா டிரஸ்ட் நிர்வாகிகள் முன்னிலையில், கொடியேற்று விழா நடந்தது. தந்திரிகள், கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, கருவறையில் இருந்து எடுத்துவந்து, கோவிலை வலம் வந்து கொடிமரத்தில் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து, தீப, துாபம் காண்பித்து பூஜைகள் நடந்தது. இன்று முதல், காலை, 7:00 மணிக்கு பறையெடுப்பு நிகழ்ச்சி நடக்கும். ஐயப்ப சுவாமிக்கு வேண்டுதல் நிறைவேற்ற, பக்தர்கள் தானியம், வெல்லம் போன்ற பொருட்களை பறையெடுப்பாக வழங்கி வழிபட உள்ளனர். இன்று நவகலச அபிஷேகம், 108 சங்காபிஷேகம், மஹாவிஷ்ணு பூஜை, பகவதி சேவை, உற்சவ பலி பூஜை போன்ற சிறப்பு பூஜைகள் நடக்க உள்ளன. வரும், 25 ம் தேதி, ஐயப்ப சுவாமி, பவானி கூடுதுறைக்கு சென்று, ஆறாட்டு உற்சவம் நடைபெறும்.
திருப்பூர் திரும்பும் சுவாமி, ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிப்பார். மாலையில், அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில் எழுந்தருளி, முக்கிய ரோடுகள் வழியாக கோவிலை சென்றடையும், விமரிசையான ஊர்வலம் நடைபெற உள்ளது. மண்டல பூஜை விழாவின் ஒரு பகுதியாக, தினமும் மாலை, 6:45 மணிக்கு, ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக, கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.