ராமேஸ்வரம் கோயிலில் சாதுக்களுக்கு இலவச நீராடல் : நேபாளம் மடாதிபதி கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03டிச 2024 04:12
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயிலில் சாதுக்கள், சன்னியாசிகள் இலவசமாக புனித நீராட தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என நேபாளம் மடாதிபதி யோகி பயாக்ரா வித்நாத் தெரிவித்தார்.
நேபாளம் காத்மாண்டு பசுபதிநாத்தில் உள்ள கோரக்நாத் மடம் நிர்வாகி யோகி பயாக்ரா வித்நாத் தலைமையில் சன்னியாசிகள் உள்ளிட்ட 48 பேர் புனித யாத்திரையாக நவ., 25ல் பஸ்ஸில் புறப்பட்டு 2800 கி.மீ., பயணித்து நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர். இவர்களை தமிழக வி.எச்.பி., தென் மண்டல அமைப்பாளர் சரவணன், ராமேஸ்வரம் ஹிந்து முன்னணி நகர் செயலாளர் நம்புராஜன், ராமநாதபுரம் மாவட்ட ஹிந்து மகா சபா தலைவர் மேகநாதன் வரவேற்றனர். இவர்கள் கோயிலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து ராமாயண பஜனை நடத்தினர். பின்னர் பஸ்ஸில் கன்னியாகுமரி, திருப்பதி, ஓடிஸா பூரிஜெகநாதர் கோயில், காசியில் சுவாமி தரிசனம் செய்து நேபாளம் செல்ல உள்ளனர். இதுகுறித்து மடாதிபதி பயாக்ரா வித்நாத் கூறியதாவது : உலக நன்மைக்காக ராமேஸ்வரம் கோயிலில் புனித நீராடி தரிசித்தோம். இங்கு நீராட, தரிசிக்க பக்தரிடம் அரசு கட்டணம் வசூலிப்பது வேதனைக்குரியது. ஆகையால் சாதுக்கள், சன்னியாசிகளுக்கு இலவசமாக புனித நீராட அனுமதிக்க வேண்டும். இந்த புனித பயணம் 6000 கி.மீ., கடந்து டிச., 15ல் முடியும் என்றார்.