கார்த்திகை சொக்கப்பனை தீபம் : பாரம்பரியம் காக்கும் கிராமத்தினர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03டிச 2024 04:12
திருப்புத்தூர்; திருப்புத்தூர் கிராமங்களில் கார்த்திகை தீப விழாவன்று சொக்கப்பனை கொளுத்த பாரம்பரிய முன்னேற்பாடுகளில் கிராமத்தினர் ஈடுபடுவதைப் பார்க்க முடிகிறது.
கார்த்திகை தீபத் திருவிழாவன்று கோயில்கள் முன்முற்றத்தில் பனை ஓலைகளை கூம்பு போன்று கோபுரமாக கட்டி சொக்கப்பனை கொளுத்தி, தீபத்தை வழிபடுவது பாரம்பரியமாக தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த சொக்கப்பனை தயாரிப்பதற்காக காடுகளில் மரம் வெட்டி கொண்டுவருவதை கிராமத்தினர் பாரம்பரியமாக செய்கின்றனர். பல இடங்களில் நடைமுறை மாறினாலும் சில கிராமங்களில் பாரம்பரியத்தை கடைபிடிப்பதைப் பார்க்க முடிகிறது. திருப்புத்தூர் அருகே கொளுஞ்சிப்பட்டியில் மூன்று நாட்களுக்கு முன்பாக கிராம பெரியவர்கள்,இளைஞர்கள் காட்டிற்கு சென்று பல கிளைகளுடன் கூடிய வேளாமரத்தை வெட்டி பலரும் சேர்ந்து கையில் தூக்கியவாறே கிராமத்திற்கு சென்றனர். இன்று அதற்கான பனை ஓலைகளை வெட்டி சேகரிக்கின்றனர். பணியாட்கள் இல்லாமல் கிராமத்தினரே முன்னின்று செய்கின்றனர். வசதி அதிகரித்தாலும் தாங்களே சென்று இப்பணிகளை இவர்கள் செய்கின்றனர். கார்த்திகைத் தீபத்தன்று அம்மன் கோயில் முன் வெட்டி கொண்டு வந்த மரத்தை நட்டு,பனை ஓலைகளால் உயரமான கோபுரமாக்கி சொக்கப்பனை கொளுத்த உள்ளனர். எரிந்த பின் சொக்கப்பனையில் இருந்த பனை மட்டையை போட்டி போட்டு எடுத்துக் கொண்டு அவர்களின் வயல்களில் சனி மூலையில் செருகி வைப்பார்கள். சாம்பலை வயல்களில் தெளிப்பதும் உண்டு. சொக்கப்பனை கொளுத்த புராண காரணங்கள் கூறப்பட்டாலும், அறிவியல் ரீதியாக ‛ஐப்பசி அடைமழையில் பூச்சியினங்கள் முட்டையிடும் காலம். கார்த்திகை மாதத்தில் முட்டைகளில் இருந்து பூச்சியினங்கள் வெளிவரும் காலம்.பூச்சிகள் பயிர்களை அழிக்காமல் தடுக்கவே சொக்கப்பனை கொண்டாடப்படுகிறது. இந்த ஓளியில் கவரப்படும் பூச்சிகள் தீயில் வீழ்ந்து மடியும். பயிர்கள் சேதத்தில் இருந்து தப்பித்து விடும்.’ என்றும் கிராமத்தினர் கூறுகின்றனர்.