சுக்ரீவன் ராமனிடம், ராமா! இனி சுகமோ துக்கமோ நம் இருவருக்கும் ஒன்றுதான்! என்று சொல்லி நண்பனாகச் சேர்ந்தான். அப்போது பலசாலியான அனுமன், ஒரு மரக்கிளையை முறித்து நெருப்பு மூட்டினார். அக்னி சாட்சியாக நண்பர்கள் இருவரும் வலம் வந்து ஒருவருக்கொருவர் உதவி செய்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டனர். அப்போது அசோகவனத்தில் இருந்த சீதைக்கு இடதுகண் துடித்தது. பெண்களுக்கு இடது கண் துடித்தால் நன்மை ஏற்படும். தனக்கு நல்லகாலம் வரப்போகிறது என்பதை எண்ணி சீதை மகிழ்ந்தாள். ஆண்களுக்கு வலதுகண் துடித்தால் நல்லது என்பர்.