பதிவு செய்த நாள்
18
டிச
2024
04:12
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவில் மற்றும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆய்வு செய்தபின், வரும், பிப்., 10ம் தேதி, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கும், ஏப்., 4ம் தேதி, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நடந்து வரும் கும்பாபிஷேக பணிகளை ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் ஆய்வு செய்தார். முன்னதாக, பட்டீஸ்வரர், பச்சை நாயகி அம்மன், நடராஜ பெருமானையும் தரிசனம் செய்தார். தொடர்ந்து, பேரூர் படித்துறையில் புதியதாக கட்டப்பட்டு வரும் தர்ப்பண மண்டபத்தையும் ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மூலவர் சன்னதி மற்றும் பாம்பாட்டி சித்தர் சன்னதியில் தரிசனம் செய்தார். அதன்பின், வசந்த மண்டபம், லிப்ட் அமைக்கும் பணி, கல்யாண மண்டபம் கட்டும் பணி போன்ற திருப்பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
அதன்பின், அமைச்சர் சேகர்பாபு, நிருபர்களிடம் கூறுகையில்,"ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், பக்தர்கள் தந்த, சுமார், 28 கிலோ தங்க நகைகளை, முன்னாள் நீதிபதி முன்னிலையில், வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்னும் இரண்டு நாட்களில், அந்த நகைகள், மும்பையில் உள்ள மத்திய அரசின் உருக்கு ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டு, வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்படும். இதேபோல, பழனி, சமயபுரம் உட்பட, 10 திருக்கோவில்களில் இருந்து, சுமார், 700 கிலோ தங்க நகைகளை, இம்மாத இறுதிக்குள், உருக்கு ஆலைக்கு அனுப்பப்படும். அதன் மூலம் கோவில்களுக்கு வைப்பு நிதியின் மூலம், இந்தாண்டு, 10 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கும். பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், 4½ கோடி ரூபாய் மதிப்பில், நடந்து வரும் கும்பாபிஷேக பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. பேரூர் தர்ப்பண மண்டபம் பணியும் நிறைவடைந்துள்ளது. பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், வரும், பிப்., 10ம் தேதி, கும்பாபிஷேகம் நடத்தப்படும். மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், லிப்ட் அமைக்கும் பணி, மார்ச் மாதத்திற்குள் நிறைவடைந்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஏப்., 4ம் தேதி, கும்பாபிஷேகம் நடத்தப்படும். மாஸ்டர் பிளான் திட்டத்தில், பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்தாண்டு, இறுதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும். 920 கோடி ரூபாய், உபதாரர்கள் நிதியை பயன்படுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில், திருப்பணி நடந்து வருகிறது.
வெள்ளியங்கிரி மலையில் படிகளை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும், ஜனவரியில், வனத்துறை அமைச்சரிடம் ஆலோசனை மேற்கொண்டு, வெள்ளியங்கிரி ஆண்டவரை, பக்தர்களை சென்று தரிசிக்க தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பார்க்கிங்கில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என, உத்தரவு பிறப்பித்துள்ளேன். தொடர்ந்து, கண்காணித்து வருகிறோம். பிறவா புளி மரத்தை பாதுகாக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில், 7000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. ,"என்றார்.